Sunday, December 21, 2014

வேப்பமுத்து... புளியமுத்தே...

கே.கே.மகேஷ்




            குத்தாலத்தையும், தாமிரபரணியையும் மட்டும் பார்த்திட்டு திருநெல்வேலிய பலபேரு செழிப்பான ஜில்லான்னு நினைச்சிக்கிட்டு இருக்கிய அண்ணாச்சி. அங்க மருந்துக்கு கூட பச்சை தென்படாத தரிசுக்காடு நிறைய கிடக்கு பாத்துக்கோங்க. அதுல ஒண்ணு தான் எங்க சோலேரி (சோலைசேரி) கிராமம்.
            செழிச்ச பூமியில வாழுத செம்மறியாடு குனிந்த தலை நிமிராம  மேயிறதையும், வறட்சிக்குப் பெறந்த வெள்ளாடு மரம், மட்டைன்னு கண்டது, கழியதை திங்கதையும் பார்த்திருப்பீய. எங்க ஊர் சின்னதுகளும் அப்படித்தான். நஞ்சிலும் நாலு வாய் திங்குங்க.
            நான் சின்னப்பிள்ளையா இருந்தேமில்லா... அப்போம் ஆலம்பழம், அரசம்பழம், இத்திப்பழம், பூலாத்தி -ழம், பூனை உடுக்குப் பழம், விளக்கெண்ணெய் பழம், மிளகு தக்காளி பழம், கூண்டு தக்காளிப்பழம், கருவேப்பிலை பழம், கோவப்பழம், சப்பாத்திக் கள்ளிப்பழம், ஈச்சம்பழம், பனம்பழம், இலந்தைப்பழம், சொடக்குக்காய், தும்பைப்பூனு எல்லாத்தையும் புடுங்கித் தின்னுட்டு அலைவோம்.
புளியும், பனையும் ரொம்பப் பாவம். கொழுந்து, பூ, பிஞ்சு, காய், செங்காய், பழம், கொட்டை என்று புளிய மரத்தோட எந்தப் பாகத்தையும் நாங்க விட்டு வெச்சது இல்ல. அதேமாரி நொங்கு, கடுக்கா, பனங்கா, பனம்பழம், பனங்கிழங்கு, தவுன், பனஞ்சோறு எதையும் விட மாட்டோம். காய்க்காத மா, கொய்யா, நாவல் மரத்துல இலையைச் சவச்சாவது ஆசையைத் தீத்துக்குவோம். ஊர்க்காரன் எறவையில (தோட்டத்தில்) தின்னதையும் வரிசைப்படுத்துனா பக்கம் கொள்ளாது, ஆமா.
            ஒவ்வொரு பழத்தையும் திங்க நாங்க பண்ணுன கூத்துக்களை எல்லாம் கதை கதையாய்ச் சொல்லலாம். சப்பாத்திக் கள்ளிப் பழத்தை எடக்கு மடக்கா விழுங்கிட்டு, தொண்டையில் முள் குத்தி அழுதிருக்கிறோம். அரசம்பழம் பறிக்கும் போது எசக்குப் பிசகாக கொட்டெரும்பு கடிச்சி தடுப்புத் தடுப்பா வீங்கியிருக்கு. இலந்தைப் பழத்தை பறிக்கும் போது கொக்கி மாட்டுன மாரி முன்னங்கையில முள் கோர்த்துக்கிடும். பழத்தை விடவும் மனசில்லாம, கையை எடுக்கவும் முடியாம ஏழெட்டு நிமுசம் வரைக்கும் நட்டெம நின்னுருக்கோம்.
            வேப்பம் பழத்தைப் பத்திச் சொல்லுதேன், அதுல தான் நிறைய விசயம் இருக்கு. வேப்பம்பழம் பெறக்குறதுக்காவ கிழக்க ராமர் கோயில், தெக்க இலங்காமணி அய்யனார், குளத்துப்பக்கம் மேலம்மன், தேவமார் தெரு மொட்டையசாமி, சுடுகாட்டு சுடலைமாடசுவாமினு கோயில் கோயிலா அலைவோம். நாங்க என்ன செய்யட்டும்? எங்க ஊருல கோயில்கள்ல மட்டும் தான மரம் இருக்கு?! 
பத்து வயசுப் பய சேக்காளிகளோட குளத்தாங்கரை, சுடுகாடுன்னு அலைவதை எந்தத் தாய் பொறுத்துக்குவா? எங்க அம்ம விளக்குமாத்தாலையே அடிப்பாவ. ஆனாலும், செட் சேர்ந்து பழம் பெறக்கப் போயிருவோம். இனிச்சிக்கிட்டே லேசா கசக்குற வேப்பம்பழ ருசி அப்பிடி இழுக்கும். கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை அது.
            பழத்திற்கு மட்டுமல்ல அண்ணாச்சி, கொட்டைக்கும் கிராக்கி உண்டு. உங்களுக்கு புரிததுக்காக கொட்டைன்னுட்டேன். எங்க ஊர்ல அதுக்குப் பேரு வேப்பமுத்து. வேப்பமுத்தைச் சேர்த்து பலசரக்கு கடையில குடுத்தா பண்டம் கிடைக்குமுன்னு, சின்னப்பயல்வ பூராம் இதே வேலையாத்தான் இருப்போம். இத்தனைக்கும் எங்க அப்பா பலசரக்கு கடை வெச்சிருந்தாவ. வேண்டியங்கிற முட்டாய திங்கலாம். ஆனாலும், சொந்தக் காசுல ஊரான் கடையில திங்கற மாரி வருமா?
கடயைவிட, ‘வேப்பமுத்து புளியமுத்தேன்னு கூப்பாடு போட்டுக்கிட்டு சைக்கிளில் வரும் வெளியூர் யாவாரியிடம் கொடுத்தால், நிறைய காசு கிடைக்கும். அதை வச்சிக்கிட்டு ஊத்துமலை தியேட்டர்ல மேட்னி ஷோ படமும் பார்த்துவிட்டு, இடைவேளையில் முறுக்கும், கடலைமிட்டாயும் திங்கலாம். அதனால கொஞ்சம் பெரிய பயல்வளும் கூச்சமில்லாம கொட்ட பொறக்குவானுவ. மரத்தடியில் அடிக்கடி எல்லைப் பிரச்சினை வரும். அதுக்காக பெரிய சுள்ளி(குச்சி)யால வட்டம் போட்டுக்கிடுவோம். இந்தக் கோட்ட நீயும் தாண்டக்கூடாது, நானும் தாண்ட மாட்டேன்னு.
            சீக்கிரமா நிறைய முத்து சேக்குறதுக்கு நாங்க ஒரு ஐடியா வெச்சிருந்தோம். என் சேக்காளியிலகோனா சுனாராமர், ‘பறட்டைபாஸ்கர், ‘மூக்குத்திசரவணன், ‘அடையான்மாரி எல்லாரும் ஜல்லுன்னு மரம் ஏறுவாங்க. குண்டு குண்டு வேப்பம்பழங்களை அவங்க பறிச்சிப் போட, நான் மரத்தடியிலேயே கடைபோடுவேன். எங்களைப் போல பழம் பொறுக்குவதற்காக வந்திருக்கும் பெண் பிள்ளைகளிடம், கொட்டைக்குப் பழம்ன்னு கூவிக் கூவி விப்பேன்.
            ரொம்ப சின்னப்பழமாக இருந்தால் 3 முத்துக்கு ஒரு பழம், நடுத்தர பழம் என்றால் 5 முத்து. அரிய, பெரிய பழம்னா சாமானியமாத் தர மாட்டேன். “... பிள்ளையலா லாலா குண்டு பழம் வந்துருக்கு... லாலா குண்டு. யாரு பர்ஸ்ட்டு 20 முத்து தாரீயளோ அவியளுக்குத்தான் பழம்என்பேன். பிடிச்ச பிள்ளையளுக்கு மட்டும் ரகசிய டிஸ்கவுண்ட் கொடுப்பேன். அதெல்லாம்மேலஇருக்கிறவனுக்குத் தெரியாது. (வேப்பம் பழம் கொடுத்தே காதல் பண்ணி, கல்யாணம் முடிச்ச கதையெல்லாம் எங்க ஊர்ல இருக்கு. எனக்குத் தான் அது வாய்க்கலை)

     கை கொள்ளாத அளவுக்கு முத்து சேர்ந்திட்டா, எங்களக் கையில பிடிக்க முடியாது. கடப் பண்டம் தான், சினிமா தான்.



(குறிப்பு: 14/12/2014ம் தேதி தி இந்து (தமிழ்) நாளிதழில் இந்த கட்டுரை பிரசுரமாகி உள்ளது.)