Monday, November 2, 2009

மஞ்சள் துண்டு ஏன்?





கலைஞர் மீது எனக்கு அளவு கடந்த மரியாதை உண்டு. அதற்கு அவரது நகைச்சுவை உணர்வும் ஒரு காரணம். அவரது நகைச்சுவை உணர்வுக்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு.



மஞ்சள் துண்டு ஏன்?

அறிவுக்கு மதிப்பளித்து அறியாமைக்கு விடை கொடுத்த
அஞ்சுகச் செல்வர் மஞ்சள் கம்பளி அணிவது ஏன்?
மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்; நானும் மறுக்காமல்-
தனி அடையாளம் இருக்கட்டுமே என்று
இனி இதையே அணிவதென முடிவெடுத்தேன்
இந்த மஞ்சள் நிறம் குறித்து புத்தர் கருத்தொன்றும் உண்டு
"தருக்கொழிந்து தன்னை வெல்வான்
தன்னியல்பை ஆள்வான் எவனோ;
ஒளியும் தெளிவும் உண்மையுமானவன்
எவனோ; அவனே மஞ்சளாடை அணியலாம்"
இந்தத் தகுதி முழுவதும் எனக்குண்டென்று
தரித்திடவில்லை மஞ்சள் துண்டு;
இத்தகுதிக்கென்னைத் தயார்படுத்திக் கொள்ளவே
தவம் கிடக்கின்றேன்.
18.11.2003 அன்று எழுதிய கவிதையில் கலைஞர் இப்படிச் சொல்லி இருக்காரு. "6 வருசம் ஆச்சே தலைவர் சொன்ன மாதிரி இந்த தகுதிக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாரா?"னு கேட்கிறீங்களா?
அவரைவிட நீங்க பயங்கரமா ஜோக் அடிக்கிறீங்களே பாஸு!

வைகோவுக்கு கலைஞர் அழைப்பு




'பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறந்து
சிறுத்தையே வெளியில் வா!' என்று
புரட்சிக் கவிஞர் இந்நேரம் உன்னை
அழைத்திருப்பார்; அணைத்து மகிழ்ந்திருப்பார்
அய்யாவும் அண்ணாவும் இருந்தால் ஆரத் தழுவியிருப்பர்
அவர்களையெல்லாம் அந்தோ; இழந்துவிட்டோம்!
(இடையில் சில வரிகள் விடப்பட்டுள்ளது)
வையகத்தில் நிலைநாட்டிய வற்றாப்புகழ்
வைகோ; நீ வருக! வாழ்க!
தீரன் நீ- வீரன் நீ
திக்கெட்டும் பரவிடும்
தீக்காட்டுக்குள்ளேயும்
தென்றலாய் உலவிடும் தியாகி நீ-
தெளிவற்றோர் இதனை உணராத காரணத்தால்
ஒளியற்றுப் போன கருத்துக் குருடரானார்
'இம்' என்றால் சிறைவாசம்
'ஏன்' என்றால் வனவாசம் என்ற
உயிர்க்கொல்லி சர்வாதிகாரத்தை
உருசி கண்ட பூனைகள் எல்லாம் உலகில்
உருண்டுவிட்ட வரலாற்றை மறந்துவிட்டு
இருண்டுவிட்ட நெஞ்சத்தின் உடைமையாளர்கள்;
இரும்புக் கோட்டைக்குள் உன்னைப் போட்டு வதைத்தார்! பாவம்;
ஏறுநடைச் சிங்கத்தை எத்தனைதான் கொடுமை செய்தாலும்
எலியாக முயலாக அது மாறுவதுண்டோ?
புலியாகப் புயலாக நீ வருவாய் என்றே நானறிவேன்!
அப்படித்தான் அன்புத்தம்பி; நீ வந்துள்ளாய்
செப்படி வித்தைகள் இனிச் செல்லுபடியாகாதென்று
செங்கோலேந்திகட்கு வெறும் சேதிகளாய் அல்ல;
'சங்கொலி' முழக்கமே செய்திடுவாய்!- உன்
பெற்ற தாயின் முகம், உற்ற துணைவி முகம்,
மற்றுமுள்ள நண்பர்கள் மழலையர் சுற்றத்தின் முகம்
பூத்திருக்கும் இந்நாளில் உனைக் காணக்
காத்திருக்கும் என் கண்கள் என
எனையறிந்த நீ அறிவாய்; வேறு
உனைத் தவிர யார் அறிவார் இந்த உண்மை!



8.02.2004 அன்று கலைஞர் எழுதிய கவிதை இது. இப்போது படித்தால் சிரிப்பு சிரிப்பா வருது!

Sunday, November 1, 2009

ஐயோ பாவம் என் அப்பா



பெயிலானதை பலமுறை
மறைத்துள்ளேன் அவரிடம்
முதல் முறையாக
பாஸ் ஆனதை மறைக்கின்றேன்
காதல் தேர்வில்!





காதல் அறிவியல்


மைய ஈர்ப்பு விசையும்
மைய விலக்கு விசையும்
சமமாய் இருப்பதாலேயே
மாறாத வட்டப் பாதையில்
சுற்றி வருகிறதாம் பூமி!

இப்போது புரிகிறது
என்னை ஏன்
நீ விலக்குகிறாய்
என்பது!


என்ன ரொம்ப சுமாரா இருக்குதா?
8.06.07 அன்று எழுதியது இந்த கவிதை!


அய்யா துணை


அழகு தமிழில் என் முதல் பதிவு இது. எனக்கு தமிழ்ப் பால் ஊட்டிய தந்தை, தமிழ் ஆசான், பத்திரிகைகள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.