Sunday, December 21, 2014

வேப்பமுத்து... புளியமுத்தே...

கே.கே.மகேஷ்




            குத்தாலத்தையும், தாமிரபரணியையும் மட்டும் பார்த்திட்டு திருநெல்வேலிய பலபேரு செழிப்பான ஜில்லான்னு நினைச்சிக்கிட்டு இருக்கிய அண்ணாச்சி. அங்க மருந்துக்கு கூட பச்சை தென்படாத தரிசுக்காடு நிறைய கிடக்கு பாத்துக்கோங்க. அதுல ஒண்ணு தான் எங்க சோலேரி (சோலைசேரி) கிராமம்.
            செழிச்ச பூமியில வாழுத செம்மறியாடு குனிந்த தலை நிமிராம  மேயிறதையும், வறட்சிக்குப் பெறந்த வெள்ளாடு மரம், மட்டைன்னு கண்டது, கழியதை திங்கதையும் பார்த்திருப்பீய. எங்க ஊர் சின்னதுகளும் அப்படித்தான். நஞ்சிலும் நாலு வாய் திங்குங்க.
            நான் சின்னப்பிள்ளையா இருந்தேமில்லா... அப்போம் ஆலம்பழம், அரசம்பழம், இத்திப்பழம், பூலாத்தி ப-ழம், பூனை உடுக்குப் பழம், விளக்கெண்ணெய் பழம், மிளகு தக்காளி பழம், கூண்டு தக்காளிப்பழம், கருவேப்பிலை பழம், கோவப்பழம், சப்பாத்திக் கள்ளிப்பழம், ஈச்சம்பழம், பனம்பழம், இலந்தைப்பழம், சொடக்குக்காய், தும்பைப்பூனு எல்லாத்தையும் புடுங்கித் தின்னுட்டு அலைவோம்.
புளியும், பனையும் ரொம்பப் பாவம். கொழுந்து, பூ, பிஞ்சு, காய், செங்காய், பழம், கொட்டை என்று புளிய மரத்தோட எந்தப் பாகத்தையும் நாங்க விட்டு வெச்சது இல்ல. அதேமாரி நொங்கு, கடுக்கா, பனங்கா, பனம்பழம், பனங்கிழங்கு, தவுன், பனஞ்சோறு எதையும் விட மாட்டோம். காய்க்காத மா, கொய்யா, நாவல் மரத்துல இலையைச் சவச்சாவது ஆசையைத் தீத்துக்குவோம். ஊர்க்காரன் எறவையில (தோட்டத்தில்) தின்னதையும் வரிசைப்படுத்துனா பக்கம் கொள்ளாது, ஆமா.
            ஒவ்வொரு பழத்தையும் திங்க நாங்க பண்ணுன கூத்துக்களை எல்லாம் கதை கதையாய்ச் சொல்லலாம். சப்பாத்திக் கள்ளிப் பழத்தை எடக்கு மடக்கா விழுங்கிட்டு, தொண்டையில் முள் குத்தி அழுதிருக்கிறோம். அரசம்பழம் பறிக்கும் போது எசக்குப் பிசகாக கொட்டெரும்பு கடிச்சி தடுப்புத் தடுப்பா வீங்கியிருக்கு. இலந்தைப் பழத்தை பறிக்கும் போது கொக்கி மாட்டுன மாரி முன்னங்கையில முள் கோர்த்துக்கிடும். பழத்தை விடவும் மனசில்லாம, கையை எடுக்கவும் முடியாம ஏழெட்டு நிமுசம் வரைக்கும் நட்டெம நின்னுருக்கோம்.
            வேப்பம் பழத்தைப் பத்திச் சொல்லுதேன், அதுல தான் நிறைய விசயம் இருக்கு. வேப்பம்பழம் பெறக்குறதுக்காவ கிழக்க ராமர் கோயில், தெக்க இலங்காமணி அய்யனார், குளத்துப்பக்கம் மேலம்மன், தேவமார் தெரு மொட்டையசாமி, சுடுகாட்டு சுடலைமாடசுவாமினு கோயில் கோயிலா அலைவோம். நாங்க என்ன செய்யட்டும்? எங்க ஊருல கோயில்கள்ல மட்டும் தான மரம் இருக்கு?! 
பத்து வயசுப் பய சேக்காளிகளோட குளத்தாங்கரை, சுடுகாடுன்னு அலைவதை எந்தத் தாய் பொறுத்துக்குவா? எங்க அம்ம விளக்குமாத்தாலையே அடிப்பாவ. ஆனாலும், செட் சேர்ந்து பழம் பெறக்கப் போயிருவோம். இனிச்சிக்கிட்டே லேசா கசக்குற வேப்பம்பழ ருசி அப்பிடி இழுக்கும். கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை அது.
            பழத்திற்கு மட்டுமல்ல அண்ணாச்சி, கொட்டைக்கும் கிராக்கி உண்டு. உங்களுக்கு புரிததுக்காக கொட்டைன்னுட்டேன். எங்க ஊர்ல அதுக்குப் பேரு வேப்பமுத்து. வேப்பமுத்தைச் சேர்த்து பலசரக்கு கடையில குடுத்தா பண்டம் கிடைக்குமுன்னு, சின்னப்பயல்வ பூராம் இதே வேலையாத்தான் இருப்போம். இத்தனைக்கும் எங்க அப்பா பலசரக்கு கடை வெச்சிருந்தாவ. வேண்டியங்கிற முட்டாய திங்கலாம். ஆனாலும், சொந்தக் காசுல ஊரான் கடையில திங்கற மாரி வருமா?
கடயைவிட, ‘வேப்பமுத்து புளியமுத்தே’ன்னு கூப்பாடு போட்டுக்கிட்டு சைக்கிளில் வரும் வெளியூர் யாவாரியிடம் கொடுத்தால், நிறைய காசு கிடைக்கும். அதை வச்சிக்கிட்டு ஊத்துமலை தியேட்டர்ல மேட்னி ஷோ படமும் பார்த்துவிட்டு, இடைவேளையில் முறுக்கும், கடலைமிட்டாயும் திங்கலாம். அதனால கொஞ்சம் பெரிய பயல்வளும் கூச்சமில்லாம கொட்ட பொறக்குவானுவ. மரத்தடியில் அடிக்கடி எல்லைப் பிரச்சினை வரும். அதுக்காக பெரிய சுள்ளி(குச்சி)யால வட்டம் போட்டுக்கிடுவோம். இந்தக் கோட்ட நீயும் தாண்டக்கூடாது, நானும் தாண்ட மாட்டேன்னு.
            சீக்கிரமா நிறைய முத்து சேக்குறதுக்கு நாங்க ஒரு ஐடியா வெச்சிருந்தோம். என் சேக்காளியில ‘கோனா சுனா’ ராமர், ‘பறட்டை’ பாஸ்கர், ‘மூக்குத்தி’ சரவணன், ‘அடையான்’ மாரி எல்லாரும் ஜல்லுன்னு மரம் ஏறுவாங்க. குண்டு குண்டு வேப்பம்பழங்களை அவங்க பறிச்சிப் போட, நான் மரத்தடியிலேயே கடைபோடுவேன். எங்களைப் போல பழம் பொறுக்குவதற்காக வந்திருக்கும் பெண் பிள்ளைகளிடம், கொட்டைக்குப் பழம்ன்னு கூவிக் கூவி விப்பேன்.
            ரொம்ப சின்னப்பழமாக இருந்தால் 3 முத்துக்கு ஒரு பழம், நடுத்தர பழம் என்றால் 5 முத்து. அரிய, பெரிய பழம்னா சாமானியமாத் தர மாட்டேன். “ஏ... பிள்ளையலா லாலா குண்டு பழம் வந்துருக்கு... லாலா குண்டு. யாரு பர்ஸ்ட்டு 20 முத்து தாரீயளோ அவியளுக்குத்தான் பழம்” என்பேன். பிடிச்ச பிள்ளையளுக்கு மட்டும் ரகசிய டிஸ்கவுண்ட் கொடுப்பேன். அதெல்லாம் ‘மேல’ இருக்கிறவனுக்குத் தெரியாது. (வேப்பம் பழம் கொடுத்தே காதல் பண்ணி, கல்யாணம் முடிச்ச கதையெல்லாம் எங்க ஊர்ல இருக்கு. எனக்குத் தான் அது வாய்க்கலை)

     கை கொள்ளாத அளவுக்கு முத்து சேர்ந்திட்டா, எங்களக் கையில பிடிக்க முடியாது. கடப் பண்டம் தான், சினிமா தான்.



(குறிப்பு: 14/12/2014ம் தேதி தி இந்து (தமிழ்) நாளிதழில் இந்த கட்டுரை பிரசுரமாகி உள்ளது.)

Tuesday, June 14, 2011

டீச்சருக்கு மோண்டு கொடுத்தவன்

எனக்கு 5 வயது. கிராமத்துப் பள்ளியில் 2ம் வகுப்பு போகத் தொடங்கியிருந்தேன். அப்படியொன்றும் சேட்டை செய்யவில்லை. அவர் காலத்து குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தாரா? என்று தெரியவில்லை. நான் சேட்டைக்காரன் என்று முடிவு செய்து, பக்கத்து கிராமத்தில் (கருவந்தாஇருக்கும் பெரியம்மா வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டார் அப்பா. எங்க ஊர் முத்தையா வாத்தியார் தான் அந்த ஊர் பள்ளிக்கு தலைமை ஆசிரியர். அவரும் எங்கள் ஊர் பள்ளியின் த.ஆ.ரும் அப்பாவுக்கு நண்பர்கள். அதனால், ‘கொஞ்ச நாள் பையன் அங்கு படிக்கட்டும்’னு சொல்லி, டி.சி.யும் வாங்காமல், அட்மிஷனும் போடாமல் என்னை நாடு கடத்திவிட்டார்கள். கூட்டுச் சதி.

நான் அங்கு பள்ளி போக வேண்டுமாம். இங்கு எனக்கு அட்டென்டென்ஸ் போடுவார்களாம். நான் அங்கு பரீட்சை எழுதினால், பேப்பரையே பார்க்காமல் இங்கு என்னை பாஸ் செய்வார்கள்.

இதைப் பற்றி எல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. கவலைப்படவும் இல்லை. சோளக்கஞ்சி, கம்மங்கூழு எதையாவது மோரில் கரைத்துக் கொடுப்பார் பெரியம்மா. குடித்துவிட்டு பள்ளிக்குப் போவேன். அங்கு எனக்கொரு நண்பன். பெயர் அழகு. என் வயதிலேயே அவன் எல்லா விவசாய வேலைகளையும் கொஞ்சம் கற்றிருந்தான். கூடவே நிறைய கெட்ட வார்த்தைகளும்.

நான் அவனோடு வயக்காடு, செவக்காடு எல்லாத் திக்கும் போவேன். ஆனால் அவனிடமிருந்து நான் கற்றுக் கொண்டது கெட்ட வார்த்தைகளை மட்டும் தான்.

ஒரு நாள் காலை. அது, அப்பா எனக்கு புதிய வாட்டர் கேன் வாங்கித் தந்ததற்கு மறுநாளாக இருக்க வேண்டும். ஏனென்றால் எந்தப் பொருளையும் ஒருநாளைக்கு மேல் தொலைக்காமல் வைத்திருந்ததாக இல்லை. தண்ணீரை காலி செய்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்த என்னிடம், ஒரு பையன் தண்ணி கேட்டான்.

இல்லை என்று சொல்ல மனமில்லை. மூடியை கழற்றினேன். எப்போதும் திறந்தே இருக்கும் கால்ச்சட்டை பட்டன் வழியாக ’குஞ்சை’ வெளியே எடுத்து மூடியில் ’ஒன்றுக்கு’ இருந்தேன். அவனுக்கு குடிக்கக் கொடுத்தேன். கொஞ்சம் கூட சிரிக்கவில்லை நான்.

இடையில் புகுந்த ஒரு வில்லன், "டேய் அவன் மோத்திரத்தை தாரான்டா" என்று சொல்லிவிட்டு, டீச்சரிடமும் ஓடிப்போய் பற்ற வைத்தான். "இங்க வா... நாயே..." என்று பல்லைக் கடித்தபடி அழைத்தார் டீச்சர். "நான் அப்படிச் செய்யவே இல்லை" என்று பொய் சொல்ல ஆயத்தமானேன். என் முழி காட்டிக் கொடுத்திருக்க வேண்டும். விசாரிக்காமலேயே அடி நொறுக்கிவிட்டார் டீச்சர்.

அழுது கொண்டும், மூக்கை உறிஞ்சிக் கொண்டும் உட்கார்ந்திருந்தேன். போஸ்ட் மேன் கொண்டுவந்து கொடுத்த கடிதத்தை டீச்சர் படித்துக் கொண்டிருந்தார். என் அருகே அமர்ந்து, வேடிக்கை பார்த்துக் கொண்டும், டீச்சரிடம் போட்டுக் கொடுத்த பையனைப் பற்றி கோல் சொல்லிக் கொண்டும் இருந்தார்கள் சக பொடியன்கள். அவர்களிடம் என் வீரத்தை காட்டும் விதமாக, ”தேவடியா செருக்கி... என்னைய அடிச்சிட்டு லட்டர் படிக்கா பாரு. லட்டரு...” என்றேன் விம்மியபடி.

அந்தப் பயபுள்ள.. அதையும் அப்படியே போட்டுக் கொடுத்துவிட்டான். ”இன்னைக்கு நான் செத்தேன்”னு முடிவாயிடுச்சி. எனக்கு என்ன தண்டனைனு தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மற்றவர்கள் இருந்தார்கள். ஆனால் டீச்சரோ சேரில் உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்.

பீதியோடிருந்த நான் மணியடித்ததும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடினேன். டீச்சர் நேராக என் பெரியம்மா வீட்டுக்கு போயிருக்கிறார். நடந்ததைச் சொல்லி அழுதிருக்கிறார். அந்தத் தகவல் எல்லாம் எனக்குத் தெரியாது. அப்படி ஒன்றும் எனக்கு அறிவு கிடையாது என்றாலும், அந்த ஊரைவிட்டே வெளியேறி ஒன்றரை கி.மீ. தொலைவில் இருக்கும் என் ஊருக்குப் போய்விட்டேன். நடந்த சம்பவமும், எதற்காக ஊருக்கு போகிறேன் என்பதும் எனக்கு வழியிலேயே மறந்துவிட்டது. வீட்டுக்கு வந்த என்னிடம் அப்பா, அம்மா விசாரித்ததாகவும் நினைவு இல்லை.

இதற்கிடையே, என்னைத் தேடி சைக்கிளில் ஊருக்கே வந்துவிட்டார் பெரியப்பா. அவர் சொல்லித் தான் வீட்டில் எல்லோருக்கும் விஷயம் தெரியும். எல்லோரும் கூடிச் சிரித்தார்கள்.

எங்க கோயில் பூசாரியை நாய் கடித்த போது, ”ஏல.. நம்ம கோயில் பூசாரியை நாய் சவச்சி துப்பிருச்சி தெரியுமா?” என்று மிகைப்படுத்திச் சொல்வது அப்பாவின் இயற்கை குணம். அதனால், ”என் மவன் டீச்சருக்கு ஒண்ணுக்கு இருந்து கொடுத்துட்டு ஊரைவிட்டு ஓடியாந்துட்டான்” என்று சொல்லி பெருமைப்பட்டார். அதுவரையில் 'கிடையில் (பாயில்) மோளுறவன்' என்றிருந்த என் பெயர், 'டீச்சருக்கு மோண்டு கொடுத்தவன்' என்று உருமாறியது.

Monday, November 2, 2009

மஞ்சள் துண்டு ஏன்?





கலைஞர் மீது எனக்கு அளவு கடந்த மரியாதை உண்டு. அதற்கு அவரது நகைச்சுவை உணர்வும் ஒரு காரணம். அவரது நகைச்சுவை உணர்வுக்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு.



மஞ்சள் துண்டு ஏன்?

அறிவுக்கு மதிப்பளித்து அறியாமைக்கு விடை கொடுத்த
அஞ்சுகச் செல்வர் மஞ்சள் கம்பளி அணிவது ஏன்?
மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்; நானும் மறுக்காமல்-
தனி அடையாளம் இருக்கட்டுமே என்று
இனி இதையே அணிவதென முடிவெடுத்தேன்
இந்த மஞ்சள் நிறம் குறித்து புத்தர் கருத்தொன்றும் உண்டு
"தருக்கொழிந்து தன்னை வெல்வான்
தன்னியல்பை ஆள்வான் எவனோ;
ஒளியும் தெளிவும் உண்மையுமானவன்
எவனோ; அவனே மஞ்சளாடை அணியலாம்"
இந்தத் தகுதி முழுவதும் எனக்குண்டென்று
தரித்திடவில்லை மஞ்சள் துண்டு;
இத்தகுதிக்கென்னைத் தயார்படுத்திக் கொள்ளவே
தவம் கிடக்கின்றேன்.
18.11.2003 அன்று எழுதிய கவிதையில் கலைஞர் இப்படிச் சொல்லி இருக்காரு. "6 வருசம் ஆச்சே தலைவர் சொன்ன மாதிரி இந்த தகுதிக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாரா?"னு கேட்கிறீங்களா?
அவரைவிட நீங்க பயங்கரமா ஜோக் அடிக்கிறீங்களே பாஸு!

வைகோவுக்கு கலைஞர் அழைப்பு




'பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறந்து
சிறுத்தையே வெளியில் வா!' என்று
புரட்சிக் கவிஞர் இந்நேரம் உன்னை
அழைத்திருப்பார்; அணைத்து மகிழ்ந்திருப்பார்
அய்யாவும் அண்ணாவும் இருந்தால் ஆரத் தழுவியிருப்பர்
அவர்களையெல்லாம் அந்தோ; இழந்துவிட்டோம்!
(இடையில் சில வரிகள் விடப்பட்டுள்ளது)
வையகத்தில் நிலைநாட்டிய வற்றாப்புகழ்
வைகோ; நீ வருக! வாழ்க!
தீரன் நீ- வீரன் நீ
திக்கெட்டும் பரவிடும்
தீக்காட்டுக்குள்ளேயும்
தென்றலாய் உலவிடும் தியாகி நீ-
தெளிவற்றோர் இதனை உணராத காரணத்தால்
ஒளியற்றுப் போன கருத்துக் குருடரானார்
'இம்' என்றால் சிறைவாசம்
'ஏன்' என்றால் வனவாசம் என்ற
உயிர்க்கொல்லி சர்வாதிகாரத்தை
உருசி கண்ட பூனைகள் எல்லாம் உலகில்
உருண்டுவிட்ட வரலாற்றை மறந்துவிட்டு
இருண்டுவிட்ட நெஞ்சத்தின் உடைமையாளர்கள்;
இரும்புக் கோட்டைக்குள் உன்னைப் போட்டு வதைத்தார்! பாவம்;
ஏறுநடைச் சிங்கத்தை எத்தனைதான் கொடுமை செய்தாலும்
எலியாக முயலாக அது மாறுவதுண்டோ?
புலியாகப் புயலாக நீ வருவாய் என்றே நானறிவேன்!
அப்படித்தான் அன்புத்தம்பி; நீ வந்துள்ளாய்
செப்படி வித்தைகள் இனிச் செல்லுபடியாகாதென்று
செங்கோலேந்திகட்கு வெறும் சேதிகளாய் அல்ல;
'சங்கொலி' முழக்கமே செய்திடுவாய்!- உன்
பெற்ற தாயின் முகம், உற்ற துணைவி முகம்,
மற்றுமுள்ள நண்பர்கள் மழலையர் சுற்றத்தின் முகம்
பூத்திருக்கும் இந்நாளில் உனைக் காணக்
காத்திருக்கும் என் கண்கள் என
எனையறிந்த நீ அறிவாய்; வேறு
உனைத் தவிர யார் அறிவார் இந்த உண்மை!



8.02.2004 அன்று கலைஞர் எழுதிய கவிதை இது. இப்போது படித்தால் சிரிப்பு சிரிப்பா வருது!

Sunday, November 1, 2009

ஐயோ பாவம் என் அப்பா



பெயிலானதை பலமுறை
மறைத்துள்ளேன் அவரிடம்
முதல் முறையாக
பாஸ் ஆனதை மறைக்கின்றேன்
காதல் தேர்வில்!





காதல் அறிவியல்


மைய ஈர்ப்பு விசையும்
மைய விலக்கு விசையும்
சமமாய் இருப்பதாலேயே
மாறாத வட்டப் பாதையில்
சுற்றி வருகிறதாம் பூமி!

இப்போது புரிகிறது
என்னை ஏன்
நீ விலக்குகிறாய்
என்பது!


என்ன ரொம்ப சுமாரா இருக்குதா?
8.06.07 அன்று எழுதியது இந்த கவிதை!


அய்யா துணை


அழகு தமிழில் என் முதல் பதிவு இது. எனக்கு தமிழ்ப் பால் ஊட்டிய தந்தை, தமிழ் ஆசான், பத்திரிகைகள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.